முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரின் உட்பட பணியாளர்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
இத் தாக்குதல்களில் 14 சிறுவர்களும் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உட்பட 51 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட ஐந்து பேரும் மாத்தளன் கப்பல் வீதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது உறக்கத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.